அமெரிக்க செனட் சபையில் டிரம்ப் தகுதி நீக்க தீர்மானம் விசாரணை தொடங்கியது
10 Feb,2021
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் டிரம்ப் (குடியரசு கட்சி) போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோபைடன் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தார். அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினார்கள்.
கடந்த ஜனவரி 6-ந் தேதி ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தில் கூட்டுக் கூட்டம் நடந்தது.
அப்போது பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
வன்முறைக்கு டிரம்பின் பேச்சுகளே தூண்டுதலாக இருந்தது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து அவர் மீது பதவி நீக்க தீர்மானத்தை அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் நிறைவேற்றினர்.
பின்னர் அந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீர்மானத்தின் மீதான விசாரணை இன்று செனட் சபையில் தொடங்கியது. முன்னதாக தீர்மானத்தின் மீதான விசாரணையை தொடங்குவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் ஆதரவாக 56 பேரும், எதிராக 44 பேரும் வாக்களித்தனர். செனட் சபையில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளுக்கு தலா 50 உறுப்பினர்கள் உள்ளனர்.
செனட் சபையில் ஒரு தீர்மானம் வெற்றிபெற வேண்டுமென்றால் 3-ல் 2 பங்கு ஆதரவு வேண்டும். தீர்மானம் வெற்றிபெற 67 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. தற்போது குடியரசு கட்சியை சேர்ந்த 6 உறுப்பினர்கள் மட்டுமே டிரம்புக்கு எதிராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்மானம் வெற்றி பெற்றால் அடுத்த அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட முடியாது.