அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்தது
10 Feb,2021
. இந்த வெற்றிகரமான பயணத்தை குறிக்கும் வகையில் நேற்று அமீரக விமான நிலையங்களுக்கு வருகை புரிந்த பயணிகளுக்கு சிறப்பு முத்திரை வழங்கப்பட்டது.
அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் நேற்று செவ்வாய் கிரகத்தை சென்று அடைந்ததை குறிக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களிலும் சிறப்பு முத்திரை வழங்கப்பட்டது. இந்த முத்திரைக்காக சிறப்பு மை ஒன்று தயாரிக்கப்பட்டது.
இதில் செவ்வாய் கிரகத்தில் எரிமலையில் உள்ளது போன்ற பாறை கண்டெடுக்கப்பட்டு அதில் இந்த மை தயாரிக்கப்பட்டது. இந்த வகை பாறைகள் அமீரகத்தில் ஹஜார் மலைக்குன்றுகள் மற்றும் சார்ஜாவின் மலிகா பாலைவன பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது.
பாஸ்போர்ட்டில் அச்சிடப்பட்டது
செவ்வாய் மை (மார்ஷியன் இங்க்) என்ற பெயரிலான இந்த மையில் பிரத்தியேக முத்திரை நனைக்கப்பட்டு பாஸ்போர்ட்டில் அச்சிடப்பட்டது. அந்த முத்திரையில் ‘நீங்கள் அமீரகத்திற்கு வந்தடைந்துள்ளீர்கள், அமீரகம் 09.02.2021 செவ்வாயை அடைகிறது’ என பொருள்படும் வகையிலான அரபி மற்றும் ஆங்கில மொழிகளில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையின் நடுவில் செவ்வாய் கிரகத்தை நோக்கி ‘ஹோப்’ விண்கலம் செல்வது போன்ற படமானது உள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரிந்த பயணிகளின் பாஸ்போர்ட்டில் இந்த பிரத்தியேக முத்திரையானது அச்சிடப்பட்டது. இதையடுத்து, பயணிகள் பலர் ஆச்சரியத்துடன் அதனை பார்த்து சென்றனர். பலர் சமூக ஊடகங்களில் அந்த முத்திரை பதிக்கப்பட்டதை பதிவிட்டு வருகின்றனர். அனைத்து விமான பயணிகளுக்கும் இந்த முத்திரையானது பாஸ்போர்ட்டில் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.