ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தடுப்பூசிகளை வழங்க பிரித்தானியா நிபந்தனை!
01 Feb,2021
தங்கள் நாட்டு கொரோனா தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால்தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அந்தத் தடுப்பூசிகளை வழங்க முடியும் என பிரித்தானியா நிபந்தனை விதித்துள்ளது.
இதுகுறித்து பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் எலிசபெத் ட்ரஸ் கூறுகையில், ‘பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 36 கோடி தடுப்பூசிகளை தயாரிப்பு நிறுவனங்களிடம் பிரித்தானியா அரசாங்கம் கேட்டுள்ளது. அந்தத் தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளுக்கு அனுப்புவதால், தற்போது பிரித்தானியாவில் செயற்படுத்தப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது.
ஏற்கெனவே நிர்ணயித்த வகையில் கொரோனா தடுப்பூசி திட்டம் செயற்படுத்தப்பட்டால்தான் அந்தத் தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து செயற்படுவோம் என்று தடுப்பூசித் துறை நதீம் ஸஹாவி கூறியது உண்மைதான். இருந்தாலும், அதற்கு முன்னர் பிரித்தானியா மக்கள் அனைவருக்கும் அந்தத் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
பெப்ரவரி மாத இறுதிக்குள், கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகம் நிறைந்த பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை உரிய நேரத்தில் பெறுவதில் இப்போதே பிரச்னைகள் இருந்து வருகின்றன.
பிற நாடுகளுக்கு நாங்கள் எவ்வளவு கொரோனா தடுப்பூசி வழங்குவோம் என்பதை இப்போதே கூற முடியாது. இருந்தாலும், அந்தத் தடுப்பூசிகளை விநியோகிப்பதில் அண்டை நாடுகளுடனும் பிற வளரும் நாடுகளுடனும் நிச்சயம் இணைந்து செயற்படுவோம்.
பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடப்பதற்கு பாதிப்பு ஏற்படாவிட்டால், அந்தத் திட்டம் முடிவதற்கு முன்னரே பிற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்புவோம்’ என கூறினார்.