உக்ரைனின் தடையை மீறி கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவால் தடுப்பூசி விநியோகம்!
31 Jan,2021
உக்ரைனின் தடையை மீறி கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பகுதிக்கு ரஷ்யா தனது ஸ்பூட்னிக்-வி கொவிட்-19 தடுப்பூசியை வழங்கத் தொடங்கியுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.
பெப்ரவரி முதல் மேற்கத்தேய நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வாங்குவதற்கு உக்ரைன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன் ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.
ஆனால், ரஷ்யாவுடனான அதன் எல்லையில் டொனெட்ஸ்க் பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், அங்கு உக்ரேனியத் துருப்புக்களுக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த 2014 முதல் மோதல் இடம்பெற்று வருகிறது. இந்த மோதலில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சுயாட்சியாக பிரகடனப்படுத்தப்பட்ட டொனெட்ஸ்க் குடியரசிற்கு ரஷ்யா இரண்டாயிரம் தடுப்பூசிகளை முதற்கட்டமாக வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு துறையிலும் ரஷ்யா தங்களுக்கு ஆதரவளிப்பதற்கு தாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என டொனெட்ஸ்க் குடியரசின் தலைவரான டெனிஸ் புஷிலின் தெரிவித்துள்ளார்.