பிரித்தானியாவின் தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அங்கீகரிக்கப்படாது- ஹொங்கொங் அறிவிப்பு!
30 Jan,2021
பிரித்தானியாவின் தேசிய வெளிநாட்டு (British National Overseas (BNO)) கடவுச்சீட்டை குடிவரவு அனுமதிக்குப் பயன்படுத்த முடியாது என ஹொங்கொங் அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த கடவுச்சீட்டை அடையாளத்தை நிரூபிக்கும் ஒரு வடிவமாக அங்கீகரிக்கப்படாது என ஹொங்கொங் அரசாங்கத்தின் இன்றைறய (வெள்ளிக்கிழமை) அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது, பிரித்தானிய அரசாங்கத்தின் சிறப்பு பிரிட்டிஷ் கடவுச் சீட்டுக்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளுவதற்கு எதிரான சீனாவின் நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹொங்கொங்கில் சீனாவின் கடும் ஆதிக்கம் தொடர்பான பிரித்தானியாவும் அமெரிக்காவும் சீனாவுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.
இந்நிலையில், பிரித்தானியா மில்லியன் கணக்கான ஹொங்கொங் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளதன் பின்னணியில் இவ்வாறு கடவுச் சீட்டு விடயத்தை சீனா முன்வைத்துள்ளது.
ஹொங்கொங் மக்களை இரண்டாம் தர பிரிட்டிஷ் குடிமக்களாக மாற்ற பிரித்தானியா முயற்சிக்கிறது எனவும், இது, பிரித்தானியாவின் தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் பெறுமதியை முற்றிலுமாக மாற்றிவிட்டது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.