ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து: இரு நாட்டு உறவை மீளக் கட்டியெழுப்ப அழைப்பு!
21 Jan,2021
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான உறவை மீளமைக்க அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன், உலக சுகாதார அமைப்பு மற்றும் பரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேரும் என்ற செய்தியை வரவேற்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் (Hua Chunying) இன்று (வியாழக்கிழமை) ஊடக மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பதவியேற்பு உரையில் பைடன் ‘ஒற்றுமை’ என்ற வார்த்தையைப் பலமுறை பயன்படுத்தியதாகவும், அந்த ஒற்றுமை அமெரிக்க-சீனா உறவுகளில் தற்போது தேவைப்படுவதாகவும் ஹுவா சுனிங் கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியின் கீழ், சீனாவுடனான பதற்றங்கள் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், கொரோனா தொற்று மற்றும் மனித உரிமைகள் ஆகிய விடயங்களில் காணப்பட்டன.
இந்நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னாள் செயலாளரான மைக் பொம்பியோ உட்பட பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகளுக்கு சீனா, ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகிய பகுதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.