பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்: 15 முக்கியக் கோப்புகளில் பைடன் கையெழுத்து
21 Jan,2021
பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்பது உள்ளிட்ட 15 முக்கியக் கோப்புகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளைமாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளைத் தொடங்கினார்.
பதவியேற்ற முதல் நாளிலேயே அவர், 15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி முதலாவதாக மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்து அவர் உத்தரவிட்டார்.
இந்தச் சுவர் திட்டமே 2016ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் அனைவரும் பொதுவெளியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் சட்டமூலத்தில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
அடுத்ததாக குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும் பரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் எனவும் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அத்தோடு, இதுதொடர்பான நிர்வாக நடவடிக்கைகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.