கொரோனா வைரஸ் சீன ஆய்வகங்களில் தான் தோன்றியது - அமெரிக்கா குற்றச்சாட்டு
17 Jan,2021
ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றியது.
தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவ தொடங்கிய சமயத்தில், இந்த வைரஸ் உகான் நகரிலுள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகவும், சீனா இதை திட்டமிட்டே பரப்பியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
அதுமட்டுமின்றி அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் இந்த வைரசை சீன வைரஸ் என்றே குறிப்பிட்டு வருகிறார்.
இந்த நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த வல்லுனர் குழு கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ளது.
தனிமைப்படுத்தும் காலம் முடிந்ததும் விரைவில், கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுகளை அவர்கள் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், உகான் நகரில் உள்ள ஆய்வகங்களில் இருந்தே கொரோனா வைரஸ் தோன்றியிருக்கும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கொரோனா தோற்றம் குறித்து சீன அரசிடம் கூடுதல் தகவல்களை பெற உலக சுகாதார அமைப்பின் வல்லுனர் குழு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘2019-ம் ஆண்டின் நடுப்பகுதியில் உகான் ஆய்வகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரசை ஒத்திருந்த மற்ற தொற்றுகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதனாலேயே இந்த வைரஸை சீனா திட்டமிட்டு உருவாக்கியிருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது.
ஆனால், இதற்கு நேர் மாறாக கொரோனா தொற்றால் ஆராய்ச்சியாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று சீனா கூறுகிறது. இப்போதும் கூட சீனா வைரஸ் பரவல் குறித்த முக்கிய தகவல்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை’’ என்றார்