உலகளவில், புலம் பெயர்ந்து வசிப்போரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து, வெளிநாடுகளில் வசிப்போர் குறித்து, 2020ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை, ஐ.நா., மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவு வெளியிட்டுள்ளது.
1.80 கோடி பேர்
இந்த அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து, அந்த பிரிவின் அதிகாரி கிளேர் மெனோசி கூறியதாவது: இந்தியாவைச் சேர்ந்த, 1.80 கோடி பேர், வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இந்த வகையில், சக்தி வாய்ந்த, மிகத் துடிப்பான இந்தியர்கள், புலம் பெயர்ந்தோரில் முதலிடத்தை பிடித்து உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் தான், இந்தியர்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். அனைத்து கண்டங்கள் மற்றும் பிராந்தியங்களில், வளைகுடா முதல், வட அமெரிக்கா வரையிலும், ஆஸ்திரேலியா முதல், பிரிட்டன் வரையிலும், இந்தியர்கள் தான் பரவ லாக வாழ்ந்து வருகின்றனர்.
கல்வி, தொழில், குடும்பம் காரணமாக, இந்தியர்கள் புலம் பெயர்வது அதிகமாக உள்ளது. வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில், இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கட்டுமானம், விருந்தோம்பல், ஆரோக்கிய பராமரிப்பு துறைகளில் அவர்கள் பணியாற்றுகின்றனர். விஞ்ஞானிகள், பொறியாளர்கள், டாக்டர்கள் ஆகியோரும் அதிக அளவில் உள்ளனர். கடந்த, 20 ஆண்டு களில், உலகளவில் புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கை, 17.30 கோடியில் இருந்து, 28.10 கோடியாக அதிகரித்து உள்ளது.
179 நாடுகள்
இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ, ரஷ்யா, சீனா, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அதிக அளவில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 179 நாடுகளில், அமெரிக்கா, ஜெர்மனி, சவுதி அரேபியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகளில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் முதலிடத்தில் உள்ளனர். எனினும், கொரோனா பிரச்னையால், கடந்த ஆண்டு, அவர்கள் பணம் அனுப்புவது குறைந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.