நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து அதிநவீன ஏவுகணைகளை பதுக்கி வைத்திருக்கும் ஈரான்
09 Jan,2021
அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது. அதன் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. அதேசமயம் அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் அணு ஆயுத திட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது.
தற்போது நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து ஏராளமான அதிநவீன ஏவுகணைகளை வைத்திருக்கும் படத்தை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
பிரமாண்டமான அந்தச் சுரங்கத்தில் ஏராளமான லாரிகள் மற்றும் அதிலிருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பல நூறு கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் போர் கப்பலைத் தகர்க்கக் கூடிய ஏவுகணைகள் இருப்பதும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
ஹர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் அமெரிக்கா உள்ளிட்ட எத்தகைய போர்க் கப்பலையும் தாக்கும் வல்லமை இந்த ஏவுகணைகளுக்கு இருப்பதாக ஈரான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் அவ்வப்போது வளைகுடா கடல் மற்றும் நாட்டின் பிற இடங்களில் இராணுவ பயிற்சிகளை நடத்துகிறது, அது தனது ஆயுதப்படைகளின் தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.பாரசீக வளைகுடாவில் கடற்படை அணிவகுப்பு நடத்தியதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.