அமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த வன்முறையின்போது காயமடைந்த போலீஸ் உயிரிழந்தார்
08 Jan,2021
.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றது, பாராளுமன்றத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, தேர்தல் சபை வாக்குகள் எண்ணும் பணிகளை தடுப்பதற்காக, டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். பின்னர் கலவரம் ஒடுக்கப்பட்டு, பாராளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், டிரம்ப் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட கலவரத்தின்போது காயமடைந்த போலீஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இதன்மூலம் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.