இந்தியா பாகுப்பாடு காட்டுகிறது – அமெரிக்கா குற்றச்சாட்டு!
08 Jan,2021
இந்தியா, ‘டிஜிட்டல்’ சேவை வரி விடயத்தில், அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியா, இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின், டிஜிட்டல் சேவை வரி குறித்த, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளின் விசாரணை முடிவுகள் கடந்த 6 ஆம் திகதி வெளியிடப்பட்டன.
குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘இந்தியா, இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் டிஜிட்டல் சேவை வரிகளுக்கு எதிராகவே அமைந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, அதன் டிஜிட்டல் சேவை வரி, இந்திய நிறுவனங்கள் அல்லாதவற்றை குறிவைக்கிறது. அதேசமயம், இந்திய நிறுவனங்களுக்கு வெளிப்படையாகவே விலக்கு அளிக்கிறது.
இந்திய நிறுவனங்களுக்கு கரிசனம் காட்டும் அதே சமயம், அமெரிக்க நிறுவனங்கள், அதே வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அதே சேவைக்கு, வரி விதிக்கப்படுகிறது. இத்தகைய வரி குறித்த குழப்பங்களை தீர்க்கும் வகையில், எந்த ஓர் அதிகாரப்பூர்வமான வழிகாட்டுதலையும் இந்தியா வெளியிடவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அமெரிக்கா, இந்தியாவிடம் அதன் ஆலோசனைகளையும் கோரியது.
இதையடுத்து, இந்தியாவும் தன் கருத்துக்களை சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியா பாகுபாடு காட்டவில்லை என்றும், அதேசமயம் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வர்த்தகத்தில் சமமான தளத்தை வழங்கும் முயற்சியை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.