ஹொங்கொங் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை
06 Jan,2021
ஹொங்கொங் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அந்நாட்டின் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என குற்றம் சுமத்தி எதிர்க்கட்சியினை சேர்ந்த 53 பேரை ஹொங்கொங் அரசாங்கம் கைது செய்தது.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் ஜனநாயக செயற்பாட்டாளர்களினால் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள குறித்த ஜனநாயக செயற்பாட்டாளர்கள், ஹொங்கொங் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கைகள் வெட்கக்கேடான செயல் என தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த செயற்பாடானது வாக்களிப்பு மீதான அடக்குமுறைகளை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த கைது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரசாங்கத் தரப்பு, நகர மட்டத்தேர்தல்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெற்றிபெற செய்வதற்கான முறையற்ற வாக்கெடுப்பில் ஈடுபட்டமையினாலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முறையற்ற வாக்குப்பதிவுகள் அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.