20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் பணியை தொடங்கிவிட்டதாக ஈரான் அறிவிப்பு!
05 Jan,2021
அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் பணியை தொடங்கிவிட்டதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி உத்தரவின்பேரில் போர்ட்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் பணிகள் தொடங்கியதாக ஈரான் அரசின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவிருக்கும் சூழலில், அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய அவருக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதையடுத்து ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கிடையிலான உறவு மிக மோசமடைந்துள்ளது.
ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை மீண்டும் புதுப்பித்தமை, ஈரான் உளவுப் படைத் தலைவர் காசிம் சுலைமானி கொலை, ஈரான் அணுசக்தி திட்டங்களுக்கு முன்னோடியான விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே தாக்குதல் என்பன ஈரானுக்கு கடும் நெருக்கடியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, யுரேனியத்தை 20 சதவீதம் வரை செறிவூட்டுவது உள்ளிட்ட, ஈரான் அணுசக்தி மையங்களைப் பார்வையிட சர்வதேச நிபுணர்களுக்கு அனுமதி மறுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய சட்டமூலத்தை ஈரான் நாடாளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றியது.
இந்த நிலையில், உளவுப் படைத் தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்காவால் படுகொலை செய்யப்படடதன் முதலாம் ஆண்டு நினைவு நாளான சனிக்கிழமை, யுரேனியத்தை 20 சதவீதம் வரை செறிவூட்டப்போவதாக ஈரான் அறிவித்தது. தற்போது அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்திக்கு தேவையான யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டக்கூடாது என்று ஈரானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.