புதிய ரக கொரோனா வைரஸ் அச்சம்: அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் தடைசெய்தது ஜப்பான்!
28 Dec,2020
முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ள புதிய ரக கொரோனா வைரஸ் தொற்று, தங்கள் நாட்டிலும் பரவுவதைத் தவிர்க்கும் வகையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் ஜப்பான் தடை செய்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதிய வகை கொரோனா வைரஸ் ஜப்பானில் பரவுவதைத் தவிர்ப்பதற்காக, அனைத்து நாடுகளிலிருந்தும் வெளிநாட்டினர் நாட்டுக்குள் வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை தொடங்கி வரும் 31ஆம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனாப் பரவல் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி, புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களிடம் அந்நாட்டு பிரதமர் யோஷிஹிடே சுகா கோரிக்கை விடுத்திருந்தார்.
எவ்வாறாயினும் புதிய ரக கொரோனா வைரஸ் தொற்றினால், 50 நாடுகள் பிரித்தானியாவுடனான விமானப் போக்குவரத்து தடையினை தொடர்ந்தும் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.