கொரோனா தொற்று பரவல்... ஜப்பான் அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை
27 Dec,2020
உருமாறிய கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டினர் ஜப்பானுக்கு வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மீண்டும் அச்சம் நிலவியுள்ளது. இது, முந்தைய கொரோனா பாதிப்பைவிட 70 சதவீதம் அதிக வீரியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் தென்ஆப்ரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு பரவியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் உட்பட மேலும் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. இதனிடையே, லண்டனில் இருந்து கடந்த வெள்ளியன்று ஜப்பான் திரும்பிய ஒருவர், உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டினர் ஜப்பானுக்குள் நுழைய, அந்நாட்டு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. நாளை முதல் ஜனவரி 31-ம் தேதிவரை இந்த தடை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஜப்பான் மக்கள் மற்றும் ஜப்பான் குடியுரிமை பெற்றவர்கள் 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்று உறுதியான பின்பு தான் அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜப்பான் திரும்பியதும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்துக்கொள்வது கட்டாயம் எனவும் உத்தரவிட்டுள்ளது.