80 மோப்ப நாய்கள் உதவியுடன் கொரோனா தொற்று கண்டுபிடிக்கும் பணி
26 Dec,2020
சார்ஜா போலீஸ்துறை சார்பில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் பணியில் கே9 பிரிவில் 80 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மோப்ப நாய்கள் பிரிவை சார்ஜா போலீஸ் துணை தலைமை ஆணையாளர் அப்துல்லா முபாரக் பின் அமெர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில் போலீசாருடன் இணைந்து பணியாற்றுவதில் மோப்ப நாய்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அமீரகத்திலும் பல்வேறு இடங்களில் போலீஸ் துறையில் கே-9 என்ற மோப்ப நாய் பிரிவு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நாய்களை வைத்து கொரோனா தொற்றை கண்டுபிடிக்க உள்துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டது. இதில் சார்ஜா பகுதியிலும் கொரோனா தொற்றை பொது இடங்களில் கண்டுபிடிக்க கே9 மோப்ப நாய்கள் பிரிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது சார்ஜா போலீஸ்துறையில் இந்த பணிக்காக 32 போலீஸ்துறையின் பயிற்சியாளர்களுடன் 80 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் செய்யப்படும் சோதனைகளில் 92 சதவீதம் துல்லியமான முடிவுகள் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.