சீனாவின் சினோவேக் தடுப்பூசியை மீண்டும் பயன்படுத்த துருக்கி திட்டம்!
25 Dec,2020
சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசியை மீண்டும் வரவழைத்து பயன்படுத்தவுள்ளதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாங்களாக முன்வந்த ஏழாயிரத்து 371 பேருக்கு, துருக்கி அரசாங்கம் தடுப்பூசியை செலுத்தியது. இதன் முதல் கட்டம் நல்ல விளைவை தந்துள்ளதால், மேலும் 30 லட்சம் டோஸ்களை ஓரிரு நாட்களில் வரவழைத்து துருக்கி அரசாங்கம் பயன்படுத்தவுள்ளது.
இதில் தடுப்பூசியானது 91.25 சதவீதம் பயனளிக்கும் வகையில் இருந்ததால், மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையாத நிலையிலும், மேலும் 30 இலட்சம் டோஸ்களை துருக்கி அரசாங்கம் தருவிக்க உள்ளது.
குறித்த தடுப்பூசிகள் இன்னும் ஓரிரு நாளில் அவை பயன்பாட்டுக்கு வந்துவிடும் என துருக்கி சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெடின் கோகா தெரிவித்துள்ளார்.
சுமார் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் வகையில், நாள்தோறும் ஒன்றரை இலட்சம் அல்லது இரண்டு இலட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பரிசோதனை கட்டத்தில் இருக்கும் சீனாவின் ‘சினோஃபார்ம்’ எனப்படும் கொரோனா தடுப்பூசி, 86 சதவீதம் செயற்திறன் கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம் மதிப்பீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.