விமானி மூலமாக தைவானில் மீண்டும் பரவிய கொரோனா; குடிமக்கள் பீதி
22 Dec,2020
தைவான் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு இருந்தது. 253 நாட்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பித்த தைவானில் வெளிநாட்டில் இருந்து விமானம் ஓட்டி வந்த பைலட் ஒருவர் மூலமாக மீண்டும் கொரோனா பரவியுள்ளது. இதற்காக அந்த அவருக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தைவான் ஏர்லைன்ஸ் விமான போக்குவரத்துத் துறையில் விமானியாக பணிபுரியும் நியூசிலாந்தைச் சேர்ந்த இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த ஒரு பெண்ணுக்கு இந்த விமானி மூலமாக கொரோனா பரவியது. இதுகுறித்து தைவான் சுகாதாரத்துறை அமைச்சர் சென் சி சங், கூறுகையில், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி முதல் தைவானின் பெருநகரங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருந்தது. சிறு கிராமங்களில் மட்டுமே தாக்கம் இருந்தது. கடந்த ஏழு மாதங்களாக கொரோனா ஒழிப்புக்கு தைவான் சுகாதாரத்துறை அரும்பாடுபட்டது.
இந்நிலையில் இந்த விமானம் மூலமாக கொரோனா பரவியதால் அவருக்கு 10 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் பரவிவருகிறது என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதனை அடுத்து மீண்டும் கொரோனா பரவுவது அந்நாட்டு குடிமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.