முக கவசம் அணியாத சிலி அதிபருக்கு ரூ.2ண லட்சம் அபராதம்
20 Dec,2020
தென் அமெரிக்க நாடான சிலி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 135 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 16 ஆயிரத்து 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சிலியில் முக கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. பொதுவெளியில் முக கவசம் அணியாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதாவது முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறிய நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டின் அதிபரே முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் அதிபர் செபாஸ்டியன் பெனெரா தனது சொந்த ஊரான கச்சாகுவா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்துக்காக அவருடன் செல்பி படம் எடுத்துக்கொண்டார். அப்போது அதிபர் செபாஸ்டியன் பெனெரா முக கவசம் அணிந்திருக்கவில்லை. எனவே இந்த செல்பி படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிலி அரசு, அதிபர் செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம்) அபராதம் விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட அதிபர் செபாஸ்டியன் பெனெரா தனது செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.