நைஜீரியாவில் கடத்தப்பட்ட 344 மாணவர்கள் பத்திரமாக மீட்பு!
18 Dec,2020
வடமேற்கு நைஜீரியாவில் கடந்த வாரம் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அமினு பெல்லோ மசாரியின் செய்தித் தொடர்பாளர் அப்து லாபரன் தெரிவித்துள்ளார்.
கட்சினா மாநிலத்தில் உள்ள அரசு அறிவியல் மேல்நிலைப் பாடசாலை கங்காரா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், கிட்டத்தட்ட ஒரு வாரமாக 300க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களைக் காணவில்லை.
இந்தநிலையில், முன்னதாக கடத்தப்பட்ட 17 மாணவர்கள் மீட்கப்பட்டதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனிடையே கட்சினா மாகாணத்திற்கு அருகே உள்ள சம்பரா மாகாணத்தில் உள்ள ருகு காட்டுப்பகுதியில் மாணவர்களை வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து காட்டுக்குள் நுழைந்த நைஜீரிய இராணுவம் வியாழக்கிழமை பிற்பகுதியில் 344 பேரை மீட்டனர். 344 மாணவர்கள் மீட்கப்பட்ட போதும் மேலும், சில மாணவர்களை பயங்கரவாதிகள் தங்களுடன் அழைத்து சென்றிருக்கலாம் அல்லது கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட 344 மாணவர்களும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு பாடசாலையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை 300இற்கும் மேற்பட்ட மாணவர்கள் போகோ ஹராம் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்டிருந்தனர்.