விமானத்தில் செல்ல இருந்த பெண் பயணிகளிடம் பரிசோதனை ; மன்னிப்பு கோரியது கத்தார்
28 Oct,2020
கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு கடந்த 2 ஆம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம் புறப்பட இருந்தது. விமான நிலையத்தில் குளியலறையில், அடையாளம் தெரியாத குறைமாதத்தில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அதன் தாயை உடனடியாகக் கண்டுபிடிப்பதற்காக, விமான நிலையத்தில் வெளிநாடு செல்லத் தயாராக இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை செய்து, யாருக்கேனும் குழந்தை பிரசவித்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை கண்டறிய விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டனர். இத்தகைய பரிசோதனைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆஸ்திரேலியாவும் கடுமையாக கண்டித்திருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய கத்தார் ஏர்வேஸ், குழந்தையின் தாயைக் கண்டறிந்து அவர் தப்புவதை தடுக்கவே சோதனை நடத்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது. ஆனால், குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க, பெண் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த உடனடியாக எவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்று கத்தார் பிரதமர் ஷேக் காலித் பின் கலிபா பின் அப்துல்ஆஸிஸ் அல் தானி தெரிவித்துள்ளார்.