அரபு நாடுகளின் அங்காடிகளில் இருந்து அகற்றப்படும் பிரான்ஸ் நாட்டுப் பொருட்கள்; தீவிரமடையும் புறக்கணிப்பு
25 Oct,2020
பிரெஞ்சு நாட்டுப் பொருட்கள் ஒரு சில இஸ்லாமிய நாடுகளின் அங்காடிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன.
அராப் நாட்டவர்கள் பிரெஞ்சுப் பொருட்களை தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பிரான்சில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய இறைத்தூதர் கேலிச்சித்திரம் தொடர்பான விடயம் தொடர்ந்து சூடுபிடித்த வண்ணமே உள்ளது.
அதிபர் Emmnuel Macron கேலிச் சித்திரங்களை வரைவதை நிறுத்த வேண்டியதில்லை என அறிவித்ததை அடுத்து இஸ்லாமிய நாடுகளில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கட்டார் நாட்டில் நடைபெற இருந்த பிரெஞ்சுக்கலாச்சார விழா பின் போடப்பட்டுள்ளது.
கட்டாரில் அல்மீரா, சூக் அல் பலாடி ஆகிய பல்பொருள் அங்காடிகள் பிரெஞ்சுப் பொருட்கள் விற்பனை செய்வதை நிறுத்தி உள்ளன.
குவைத் நாட்டின் அங்காடிகளில் இருந்து பிரெஞ்சு உணவுப் பொருட்கள் நீக்கப்பட்டு வருவது சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன.
குவைத்திலுள்ள 60 வர்த்தக நிலையங்களில் பிரெஞ்சுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்திலுள்ள 450 பிரயாண முகவர்கள் பிரான்ஸ் நாட்டுக்கான விமானப் பயண முன்பதிவுகளை நிறுத்தியுள்ளனர்.
ஜோர்டான் நாட்டின் எதிர்க்கட்சி, பிரெஞ்சுப் பொருட்களை தவிர்க்குமாறு தமது நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரான்சில் இருந்து அதிகமான உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் வளைகுடா நாடுகள் தமது இறக்குமதிகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டால் பிரான்ஸ் நாட்டுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பொருளாதார நட்டம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.