5 நிமிடங்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: ஆக்ஸ்ஃபோர்டு விஞ்ஞானிகள் கண்டிபிடிப்பு
16 Oct,2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர்.
இதனை அடுத்து இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. உலக நாடுகள் பல தற்போது பொருளாதாரத்தை கருதி சமூக விலகலுடன் பணிசெய்ய குடிமக்களுக்கு உத்தரவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனா சோதனைக் கருவி கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் பணி முடித்துவிட்டு வந்து தங்களுக்கு வைரஸ் தாக்கி உள்ளதா இல்லையா என வீட்டிலேயே சோதனை செய்து கொள்ள பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக அரைமணி நேரத்தில் பரிசோதனை செய்துகொள்ள கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலை விஞ்ஞானிகள் வெறும் ஐந்து நிமிடத்தில் சோதனை செய்துகொள்ள ஓர் டெஸ்ட் கிட்டை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கருவி விமான நிலையங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் குடிமக்களை சோதனை செய்ய உதவும்.ஐந்து நிமிடத்துக்குள் கொரோனா உள்ளவர் யார் என தெரிந்துகொள்ளப் படுவதால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். இந்த டெஸ்ட் கிட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரிட்டனின் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சி அடையும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த டெஸ்ட் கிட் மூலமாக கொரோனா வைரஸ் மட்டுமல்லாமல் இன்ஃப்ளூயன்சா மற்றும் இதர வைரஸ்கள் தாக்கப்பட்டவர்களையும் அறிந்துகொள்ள முடியும். மற்ற டெஸ்ட்களில் இல்லாத சிறப்பம்சம் இதில் உள்ளது. ஜீனோம் மாறுபாடு குறித்து இதில் ஆய்வு செய்யப் படுவதில்லை. அதற்கு மாறாக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
டெஸ்ட் டியூப்களில் திரட்டப்பட்ட டிஎன்ஏ சாம்பிள்கள் பின்னர் நுண்ணோக்கி வழியாக பார்க்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.இதன்மூலம் வைரஸ் தாக்கி உள்ளதா இல்லையா என எளிதில் தெரிந்துகொள்ள முடியும். பிரிட்டன் விஞ்ஞானிகளின் இந்த முயற்சி வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது