வட கொரியா சமீபத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாலிஸ்டிக் ஏவுகணையின் அளவு அந்த நாட்டின் ஆயுத பலத்தை தொடர்ந்து கண்காணித்து வருபவர்களையும் சேர்த்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாதுகாப்புத் துறை நிபுணர் மெலிசா ஹன்ஹாம் அந்த ஏவுகணை ஏன் அமெரிக்கா மற்றும் இந்த உலகின் பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்பதை விளக்குகிறார்.
வட கொரியாவின் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு விழாவில் நள்ளிரவில் ஒரு ராணுவ அணிவகுப்பை அந்நாடு நடத்தியது.
வட கொரிய அணிவகுப்பில் காணப்படும் பிரமிப்பூட்டும் காட்சிகள், எப்போதும் உலகம் வியக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.
இம்முறை யாரும் எதிர்பாராத விதமாக நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் மிக உருக்கமாக நாட்டின் போராட்டங்கள் குறித்து பேசினார். அவ்வப்போது அவர் கண் கலங்கவும் செய்தார்.
கடைசியாக, பெரிதும் கவனம் கொள்ளத்தக்க கண்டம் விட்டு கண்டம் தாக்கக்கூடிய ஏவுகணை அந்த அணிவகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதோ அந்த ஆச்சரியமிக்க ஏவுகணை குறித்து சில முக்கிய தகவல்கள்
கிம் ஜாங் உன் இந்த வருடம் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு விழாவில் பேசியபோது, வட கொரியா, வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமே வைத்திருக்கும் ஒரு நவீன ஆயுத அமைப்பை உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.
அவர் குறிப்பாக “மூலோபாய” அதாவது அணு ஆயுத அமைப்பு நாட்டில் உருவாகி வருகிறது என்று குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும் அந்த ஆயுதத்தை அமெரிக்காவுடன் இணைத்து கிம் பேசினார். “எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நிலவும் சிக்கல் தீரவில்லை என்றால் கணிப்புகளை தாண்டி வளரும் வட கொரியா முன்பு, அமெரிக்கா கையறு நிலையில்தான் நிற்க வேண்டும்,” என கிம் பேசினார்.
இந்த புதிய ஏவுகணை கிம்மால் உறுதியளிக்கப்பட்ட ஒரு ஆயுதம். இது நிச்சயமாக அமெரிக்காவை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் டிரம்ப் நிர்வாகத்துடன் நடைபெற்ற தோல்வியுற்ற பேச்சுவார்த்தையின் முகமாகவே இது உள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைப்புக்கான புதிய அச்சுறுத்தல்
இதற்கு முன்பும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா சோதித்துள்ளது. ஆனால், தி ஹ்வாசாங் – 14 ரக ஏவுகணை திறன்கள் அளாதியானவை.
அது அணு ஏவுகணையை சுமந்து கொண்டு செல்லக்கூடியது. 2017ஆம் ஆண்டு, 10,000 கிமீட்டர் அதாவது 6,213 மைல்கள் தூரம் பறக்கும் வகையில் அந்த ஏவுகணை இரு முறை சோதிக்கப்பட்டுள்ளது.
அந்த தூரம் என்பது, கிட்டதட்ட மேற்கு ஐரோப்பா முழுவதும் மற்றும் அமெரிக்க பெருநிலப்பரப்பில் பாதியளவு சென்றடையும் ஆற்றலாகும்.
அதன்பின் 2017ஆம் ஆண்டு 13,000 கிமீ இலக்கு செல்லக்கூடிய ஹ்வாசாங் – 15 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
அது கொண்டு செல்லும் அணு ஆயுதத்தை அமெரிக்க நிலப்பரப்பில் எங்கு வேண்டுமானாலும் செலுத்தும் வல்லமை கொண்டது.
இந்த அணிவகுப்பில் இடம்பெற்ற புதிய ஏவுகணை இன்னும் சோதிக்கப்படவில்லை ஆனால் வாசாங்கை காட்டிலும் விட்டத்திலும் அளவிலும் இது பெரியதாகும்.
இந்த புதிய ஏவுகணையை சோதிக்காத வரை அதன் தாக்குதல் இலக்கு நமக்கு தெரியாது.
இருப்பினும் இதன்மூலம் நாம் ஒன்றை புரிந்துகொள்ளலாம் இதற்கு மேல் அவர்களின் தாக்குதல் இலக்கை அதிகரிக்கும் தேவை வடகொரியாவுக்கு இல்லை என்பதுதான் அது.
பல அணு ஆயுதங்களை சுமக்கும் ஏவுகணை அமைப்பை உருவாக்குதில் வட கொரியா கவனம் செலுத்தி வருகிறது.
இது ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருக்கும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புக்கு மற்றொரு சவாலாக இருக்கும்.
பல நவீன அணு ஆயுதங்களை கொண்ட நாடுகள் அனைத்தும் பல இடங்களில் தாக்கக்கூடிய அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் ஏவுகணைகளை வைத்துள்ளன. எனவே வட கொரியாவும் அதில் ஈடுபடவே விரும்புகிறது.
இந்த புதிய ஏவுகணையைச் சுற்றி பல கேள்விகள் எழுந்தாலும், வட கொரியா அணு ஆயுத போரில் எந்த அளவு திறனை வெளிப்படுத்தும் என்பதை அதனிடம் எத்தனை ஏவுகணை ராக்கெட்டுகள் உள்ளன என்பதை பொறுத்தே சொல்லிவிட முடியும். ஏனென்றால் நீங்கள் ஏவுகணைகளை லாஞ்சர்கள் கொண்டுதான் ஏவ வேண்டும்.
வட கொரியா அதிகளவில் 12 கண்டம் விட்டு கண்டு பாயும் ஏவுகணைகளை செலுத்த முடியும் என அமெரிக்கா கணக்கிட்டுள்ளது.
வட கொரியாவிடம் உள்ளதாக வெளியில் தெரிந்த ஆறு லாஞ்சர்களும் ஏவுகணைகளை செலுத்திவிட்டு அமெரிக்கா அதற்கு பதிலடி கொடுக்கும் முன் அடுத்த ஏவுகணையை செலுத்தவல்லது என்ற அனுமானத்தில்தான் இந்த கணக்கு கூறப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு வட கொரியா சீனாவில் தயாரிக்கப்பட்ட WS51200 கன ரக டிரக்கை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது.
மேலும் அதை நீர்ம விசையியல் மூலம் மாற்றம் செய்து ஏவுகணைகளை தூக்கி செல்ல பயன்படும் அதை லாஞ்சர்களாக மாற்றியது வட கொரியா.
இந்த டிரக்குகளை கொண்டுதான் வட கொரியா தனது ஏவுகணை அணிவகுப்பை நடத்துகிறது.
இப்போது நடைபெற்ற அணிவகுப்பில் முதன்முறையாக ஆறுக்கும் மேற்பட்ட டிரக்குகளை காண முடிந்தது. இந்த புதிய டிரக்குகள் வலுவாக மாற்றியமைக்கப்பட்டிருந்தன.
இதன் மூலம் தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருந்தாலும், வட கொரியாவால் கன ரக லாஞ்சர்களை உருவாக்கும் பாகங்களை பெற முடிகிறது என்பதை அறிய முடிகிறது.
மேலும் லாஞ்சர்களை மாற்றியமைக்கவும், புதியதாக உருவாக்கவும், வட கொரியாவின் உற்பத்தி திறன் மேம்பட்டு உள்ளது என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு வட கொரியாவால் உருவாக்கப்பட்ட இந்த புதிய ஏவுகணைகள், வடகொரியாவை இந்த உலகம் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதை சொல்கிறது. மேலும் அதன் தலைவரை, நாட்டின் தொழில்நுட்பத் திறனையும் நாம் குறைத்து மதிப்பிடகூடாது என்பதையும் காட்டுகிறது.
மெலிசா ஹன்ஹாம் பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களின் நிபுணர் ஆவார். மற்றும் ஓபன் நியூக்லியர் நெட்வொர்க்கின் துணை இயக்குநராகவும் உள்ளார்