கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக மியன்மார் இராணுவத்துக்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மியன்மாருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் இடம்பெற்றுவரும் விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மன்னிப்புச் சபையின் பிரசாரங்களுக்கான துணை பிராந்திய இயக்குநர் மிங் யூ ஹா இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அவர் தெரிவிக்கையிவ், “சர்வதேச மன்னிப்புச் சபைக் குழுவால் பெறப்பட்ட முதல் சாட்சியம், புகைப்படங்கள் மற்றும் காணொளி சான்றுகள் மியன்மார் இராணுவ சண்டையின் மையப்பகுதியில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் துன்படுவதை இராணுவம் முற்றும் புறக்கணிப்பதை காட்டுகின்றன.
அரகன் (Arakan) கிளர்ச்சியாளர்களுக்கும் மியன்மார் இராணுவத்திற்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் தொடர்ந்து துன்பத்தை அனுபவிக்கிறார்கள். மேலும், இந்த மனித உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் வெட்கக்கேடானவையாக உள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கண்ணிவெடிகள் மற்றும் குண்டு வெடிப்புக்களால் காயமடைந்த அல்லது கொல்லப்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் சமீபத்திய வாரங்களில் சின் மற்றும் ராகைன் மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
மிகச் சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்றாக செப்டம்பர் 18ஆம் திகதி பலேத்வாவில் உள்ள மியன்மார் இராணுவத் தளத்திற்கு அருகே மூங்கில் தளிர்களைச் சேகரித்துக்கொண்டிருந்த 44 வயதான சின் பெண் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தமையை குறிப்பிடலாம்.
மியன்மாரின் ஆயுதப் படைகள், டற்மடோவ் (Tatmadaw) என்றும் அழைக்கப்படுகின்றன. ராகைன் மற்றும் சின் மாநிலங்கள் உட்பட நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் சுயாட்சியைக் கோரும் கிளர்ச்சிக் குழுவான அரகன் இராணுவத்துடன் போரிட்டு வருகின்றது.
ராகைனில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ரோஹிங்கியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் 2017இல் இராணுவ ஒடுக்குமுறைக்குப் பின்னர் பங்களாதேசுக்கு அகதிகளாகச் சென்றனர்.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிச்செல் பேச்லெட் மனித உரிமைகள் பேரவையிடம் சமீபத்திய மாதங்களில் ராகைன் மாநிலத்தில், பொதுமக்கள் கண்மூடித்தனமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது எனவும் இது மேலும் போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் எனக் கூறியிருந்தார்.
இதேவேளை, மியன்மார் இராணுவம் சிறுபான்மையினருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளையும் முன்னெடுப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மியன்மார் இராணுவம் தவறுகளை ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டாலும்கூட, இந்தப் பயங்கரமான பாலியல் வன்முறை வழக்குகளைக் கையாளும் முறை, பொறுப்புக்கூறலுக்கான முழுமையான புறக்கணிப்பைக் காட்டுகிறது.
இந்நிலையில், மியன்மார் இராணுவத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் இடம்பெற்றுவரும் விசாரணையை துரிதப்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நடவடிக்கை எடுக்கவேண்டும்” ” என சர்வதேச மன்னிப்புச் சபையின் மிங் யூ ஹா வலியுறுத்தியுள்ளார்