அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 80 இலட்சத்தைக் கடந்தது
13 Oct,2020
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 இலட்சத்தைக் கடந்துள்ளது.
நேற்று மாத்திரம் அங்கு 45 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 இலட்சத்து 37 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் இந்த தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 316 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேலாகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இந்த வைரஸ் தொற்றில் இருந்து 51 இலட்சத்து 84 ஆயிரத்து 615 இற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான 26 இலட்சத்து 33 ஆயிரத்து 163 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்களில் 14 ஆயிரத்து 914 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.