கொரோனாவால் தொடர் காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் டொனால்டு டிரம்ப்
02 Oct,2020
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த புதன்கிழமை (30.9.2020) நடந்த பிரசார நிகழ்ச்சியின் போது அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் சென்றிருந்தார்.
இதனால், டொனால்டு டிரம்பும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் நேற்று கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளைமாளிகையில் உள்ள டொனால்டு டிரம்பிற்கு நேற்று முதல் தொடர்ந்து லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வருவதால் மேல் சிகிச்சைக்காக அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட உள்ளதாக வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் கெய்லி மெக்யெனனி தெரிவித்துள்ளார்.
அதிபர் தற்போது நல்ல உடல்நிலையில் உள்ளதாகவும், சிறிய அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவக்குழுவினரின் அறிவுறுத்தலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.
அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மருத்துவமனையில் இருந்தே தனது பணிகளை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.