ஜமால் கஷோக்கி கொலை தொடர்பாக மேலும் ஆறு சவுதியர்கள் மீது துருக்கி குற்றச்சாட்டு
28 Sep,2020
இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தில் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டமை தொடர்பாக மேலும் 06 சவுதி சந்தேக நபர்களுக்கு எதிராக துருக்கி சட்டத்தரணிகள் குற்றப்பத்திரிகையை பதிவு செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களில் இருவர் மீது கடுமையான ஆயுள் தண்டனை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரச செய்தி நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுப்படி, இருவரும் துணைத் தூதரக ஊழியர்கள் மற்றும் சவுதி ஊடகவியாளரின் கொலையைச் செய்த பின்னர் துருக்கியை விட்டு வெளியேறிய குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர் என கூறப்படுகின்றது.
அத்தோடு மற்ற நான்கு பேருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனைக்கான குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் கொலை நடந்த உடனேயே குற்ற சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களை அழித்தார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
59 வயதான ஊடகவியலாளர் கஷோக்கி கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் வைத்து சவுதி அதிகாரிகள் சிலரால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.