பரிஸில் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் முன்பாக கத்திக்குத்து: இரண்டு பேர் காயம்
26 Sep,2020
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் தாக்குதலுக்கு உள்ளான ஆணும் பெண்ணும் பிரீமியர்ஸ் லிக்னெஸ் என்ற ஊடக தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சம்பவ இடத்திலிருந்து பேசிய பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், பாதிக்கப்பட்டவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என கூறினார்.
கத்திக்குத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அருகிலேயே இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலைத் திட்டமிட உதவியது என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 5 பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
சார்லி ஹெப்டோ என்னும் பத்திரிகை முகமது நபியை அவமதிக்கும் விதத்தில் கார்ட்டூன் வெளியிட்டதற்காக பயங்கரவாதிகள் இருவர் 2015ஆம் ஆண்டு பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கவுச்சி சகோதரர்கள் என்று அழைக்கப்படும் செரீப் மற்றும் சயத் கவுச்சி ஆகியோரும் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதற்கிடையில், அவர்களுக்கு உதவியதாக 14 பேர் மீது இம்மாதம் 2ஆம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது.
வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியதைக் குறிப்பிடும் வகையில், சார்லி ஹெப்டோ பத்திரிகை, 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதே சர்ச்சைக்குரிய படங்களை மீண்டும் வெளியிட்டுள்ளது. இப்போது மறைவிடம் ஒன்றில் அந்த பத்திரிகை நடத்தப்பட்டு வரும் நிலையில், அந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு கொலை மிரட்டல் வந்துகொண்டே இருந்தது. கவுச்சி சகோதரர்கள் தொடங்கிய பணியை முடித்தே தீருவோம் என பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துக்கொண்டே இருந்தனர். இந்நிலையில், அதே அலுவலகம் முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.