சீன ஜனாதிபதி ‘ஷி ஜின்பிங்கை‘ விமர்சித்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை!
23 Sep,2020
கொரோனாத் தொற்றினைக் கையாள்வதில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்( Xi Jinping) தோல்வியடைந்து விட்டாரென விமர்சித்த தொழிலதிபருக்கு, ஊழல் வழக்கில் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீன அரசுக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் குழுவின் முன்னாள் தலைவராகக் கடமையாற்றியவர் பிரபல தொழிலதிபரான ரென் சிகியாங் (Ren Zhiqiang).
இவர் பதவியிலிருந்த போது ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பான வழக்கும் அந் நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந் நிலையில் குறித்த வழக்கில் தற்போது அவருக்கு 18 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இதற்கு முன்னதாக சீன அரசின் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளை விமர்சனம் செய்திருந்ததோடு அந் நாட்டு ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கை ‘கோமாளி’ எனவும் விமர்சித்திருந்தார்.
மேலும் சீன அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.