பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது: தீயணைப்பு படையினர்!
11 Sep,2020
லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில், ஏற்பட்ட மிகப்பெரிய தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்டதொரு போராட்டத்திற்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். மேலும், தீ மீண்டும் வருவதைத் தடுக்க தளத்தை தீயணைப்பு படையினர் குளிர்வித்துள்ளனர்.
லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன், பாதுகாப்பு சபை கூட்டத்தில் ‘நாசவேலை, தொழில்நுட்ப தவறு அல்லது அலட்சியம் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம்’ என்று கூறினார். விரைவான விசாரணைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
துறைமுகத்தின் பணியாளர்கள் இல்லாத மண்டலத்தில் எண்ணெய் மற்றும் டயர்கள் சேமிக்கப்படும் ஒரு கிடங்கில் நேற்று தீப்பிடித்தது. இந்த தீயை அணைக்கும் முயற்சிகளில், தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவ ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டனர். தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக துறைமுகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட், கடந்த ஒகஸ்ட் 4ஆம் திகதி வெடித்ததில் சுமார் 191பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.