அலெக்ஸி நவால்னி விவகாரம்: ஜேர்மனியின் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா பதில்!
08 Sep,2020
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, நச்சு வேதிப்பொருள் தாக்கத்துக்கு ஆளாவதற்கு ரஷ்யா தான் காரணம் என ஜேர்மனி முன்வைத்துள்ள குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
விஷம் வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது.
மேலும், அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜேர்மனி கூறியுள்ளது.
இந்தநிலையில், இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மரியா சகரோவா கூறுகையில், “ஜேர்மனி தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை எங்களுடன் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை. ஜேர்மனி இந்த விவகாரத்தில் உண்மையாக இருந்தால் ரஷ்ய வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஜேர்மனி இரட்டை ஆட்டத்தை ஆடவில்லை என்று நினைக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 44 வயதாகும் நவால்னி, கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளதனை, அவரது செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.
நவால்னியிடம், வாய்மொழியாக கேட்கப்படும் கேள்வியை அவரால் உணர முடிவதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.