உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம்
04 Sep,2020
அமேசான் சி.இ.ஓ ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கென்சி ஸ்காட், 6,800 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார பெண்மணிகளில் முதலிடம் பிடித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் நிறுவனம் 2020-ம் ஆண்டுக்கான உலகின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் மெக்கென்சி ஸ்காட் பணக்கார பெண்மணிகளில் இந்தாண்டு முதலிடம் பிடித்துள்ளார். 50 வயதாகும் இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 6,800 கோடி டாலர் ஆகும். இப்பட்டியலில் முதலிடத்திலிருந்த 'லோரியால்' அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசுதாரர் பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் 6,600 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மெக்கென்சி தனது கணவர் ஜெப் பெசோசுடனான 25 ஆண்டுகால மண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்ற போது, அவரிடமிருந்த அமேசானின் பங்குகளில் கால்வாசியை பெற்றார். நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளான அவற்றின் அப்போதைய மதிப்பு 3,500 கோடி டாலராகும். அதன் பங்கு மதிப்பு இப்போது இரட்டிப்பானதால் அவரது சொத்து மதிப்பும் இரட்டிப்பாகியுள்ளது. இதன் மூலம் உலகளவில் 12-வது பணக்கார பெண்மணியாக மெக்கென்சி திகழ்கிறார்.
அவர் ஜூலை வரை 170 கோடி டாலர் சொத்துக்களை 166 அமைப்புகளுக்கு தானமாக தந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
வாரன் பப்பெட், மெலிண்டா கேட்ஸ் தொடங்கியுள்ள அமைப்பிலும் இவர் கையெழுத் திட்டுள்ளார். அந்த அமைப்பு பணக்காரர்களை தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியை தொண்டு நோக்கங்களுக்காக அர்ப்பணிக்க ஊக்குவிக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் அமேசானின் பங்கு 28 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் இது 90சதவீதம் வரை உயரக்கூடும் என கணித்துள்ளனர். இதன் மூலம் ஜெப் பெசோசின் சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி டாலராக உயர்ந்துள்ளது.