லெபனானில் அரைவாசி மக்கள் உணவுப் பஞ்சத்தைச் சந்திக்கும் அபாயம்- ஐ.நா. எச்சரிக்கை!
31 Aug,2020
2020ஆம் ஆண்டின் இறுதியில் லெபனானில் அரைவாசி மக்கள் உணவுப் பஞ்சத்தைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மேற்கு ஆசிய பொருளாதார மற்றும் சமூக ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘லெபனானில் உணவுப் பாதுகாப்பு’ என்னும் தலைப்பில் ஆணையகம் வெளியிடுள்ள அறிக்கையில், “லெபனானின் முக்கிய துறைமுகமான பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பினால் உணவு தானிய இறக்குமதி தடைப்பட்டுள்ளது.
பெரும்பாலும் உணவு தானியத் தேவையில் இறக்குமதியைச் சார்ந்துள்ள லெபனானுக்கு இது மோசமான பாதிப்பாகும். தானிய சேமிப்புகளை அதிக்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தை லெபனான் அரசு உணர வேண்டும்.
உணவு விலை கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து நுகர்வோருக்கான நேரடி வர்த்தகத்தை ஊக்குவித்தல் போன்ற உணவு நெருக்கடியைத் தடுக்கத் தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, லெபனானில் 2019ஆம் ஆண்டில் 2.9% ஆக இருந்த பணவீக்கம் 2020ஆம் ஆண்டில் 50 வீதத்திற்கும் மேல் இருக்கும் என ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருந்ததை விட சராசரி உணவு விலை 141 வீதம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் ஏறத்தாழ 68.5 இலட்சம் மக்கள் வசித்துவரும் நிலையில் ஓகஸ்ற் 4ஆம் திகதி பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால் நாடு கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.