கோமா நிலையிலிருந்த ரஷிய எதிர்க்கட்சித்தலைவர் சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு அவசர அவசரமாக கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது நிலை குறித்து முக்கிய தகவலை ஜெர்மனி அரசு வெளியிட்டுள்ளது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சிக்கும் ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவரான அலெக்சி நவால்னி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் வந்திறங்கிய சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்தது.
புதினுக்கு எதிராக அதிபர் தேர்தலில் நிற்க முயன்று, தடை விதிக்கப்பட்டு, இன்னமும் அவரை கடுமையாக விமர்சித்து வருபவர் நவால்னி.
நவால்னி விமானத்தில் பயணிக்கும்போது திடீரென நோய்வாய்ப்பட்டு கோமா நிலைக்கு சென்றார் அவரது ஆதரவாளர்கள், அவரது தேநீரில் விஷம் கலந்திருக்கலாம் என்றும், அதன் பின்னணியில் ரஷிய அதிபரின் அலுவலகம் இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். அவரை ஜெர்மனிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்காக அனுப்பும்படி அந்த மருத்துவர்கள் கோர, அவரால் விமானத்தில் பயணிக்கமுடியாது என்று கூறி ரஷ்ய மருத்துவமனை அவரை ஜெர்மனிக்கு அனுப்ப மறுத்துவிட்டது.
இந்நிலையில், நவாக்னி விஷயத்தில் தலையிட்ட ஜெர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலும், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் தாங்கள் அவருக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவர் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலை அவசர அவசரமாக ரஷிய மருத்துவர்கள் மறுத்து, அவருக்கு வேறு ஏதோ பிரச்சினை முன்பே இருந்துள்ளது, இரத்தத்தில் சர்க்கரை குறைந்ததால்தான் அவர் மயக்கமடைந்துள்ளார் என்று சப்பைக்கட்டு கட்ட முயன்ற வேடிக்கையும் நடந்தேறியது.
தற்போது ஜெர்மன் மருத்துவமனை ஒன்றில் நவால்னி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் செய்தி தொடர்பாளரான ஸ்டெபென் சீபர்ட் கூறும்போது, நவால்னிக்கு யாரோ விஷம் வைத்துள்ளார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இப்படி நடந்ததற்கு ஏற்கனவே ரஷிய வரலாற்றில் உதாரணங்கள் உள்ளன, ஆகவே, உலகம் இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொள்கிறது என்றார்.
அத்துடன் மருத்துவமனையைச் சுற்றி கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதைக் குறித்து கேட்டபோது, நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து அவருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியது அவசியமாகிறது என அவர் கூறினார்.