இரான் அணு உலையில் தீ: “திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்” - என்ன நடந்தது?
24 Aug,2020
இரான் நாடான்ஸ் அணு உலையில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று இரான் அணு ஆற்றல் அமைப்பு கூறி உள்ளது.
ஆனால், யார் இதற்கு காரணம் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.
சைபர் தாக்குதலின் காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று முன்னதாக சில இரானிய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
கடந்த சில வாரங்களாக இரானில் உள்ள மின்சார மையங்களில் தீ மற்றும் வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
நாடான்ஸ் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை உரிய நேரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று இரான் அரசு ஊடகமான அல்-அலாமிற்கு அளித்த பேட்டியில் இரான் அணு ஆற்றல் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரோஸ் கமால்வண்டி தெரிவித்துள்ளார்.
அனு உலை வளாகத்தில் உள்ள சென்ட்ரிஃபூஜ் மையத்தில் தீ பரவியது.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்ய சென்ட்ரிஃபூஜ் தேவை. அணு உலைக்கான எரிபொருளாக இது பயன்படும். அதே நேரம் அணு ஆயுதம் உற்பத்தி செய்யவும் இதைப் பயன்படுத்தலாம்.
சேதமடைந்த கட்டடத்தை புதிய தொழில்நுட்பம் கொண்டு மாற்றி மேம்படுத்துவோம் என கடந்த மாதம் கமால்வண்டி தெரிவித்து இருந்தார். ஆனால், தீ சம்பவமானது மேம்பட்ட சென்ட்ரிஃபூஜ் உற்பத்தியைத் தாமதப்படுத்தி உள்ளது.
இரான் அரசு செய்தி முகமையான இர்னா, இந்த தாக்குதல் சம்பவமானது இரானின் விரோதிகளான அமெரிக்கா அல்லது இஸ்ரேலால் நடத்தப்பட்டிருக்கலாம் என்றது. ஆனால், இந்த நாடுகளை நேரடியாகக் குற்றஞ்சாட்டவில்லை.