கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்காவை முழுமையாக மூட தயார் - ஜோ பைடன்
23 Aug,2020
உலக அளவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தவறிவிட்டதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. பொருளாதாரத்தில் மட்டுமே டிரம்ப்பின் கவனம் இருப்பதாகவும், மக்கள் நலனில் அவர் அக்கறை கொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தன்னை தேர்ந்தெடுத்தால் கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தான் தயாராக இருப்பதாக ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் வந்தால், அதனையும் செய்ய தயார் என அவர் கூறினார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது இதுபற்றி அவர் கூறுகையில், “மக்களின் உயிரைக் காப்பாற்ற எதையும் செய்ய நான் தயார். வைரசை கட்டுப்படுத்தும் வரை நாட்டை பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாது. கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டை முழுவதுமாக மூட வல்லுனர்கள் பரிந்துரைத்தால் அதையும் செய்வேன்” என்றார்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க ஜனாதிபதி டிரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஜோ பைடனின் இந்த வாக்குறுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.