கொவிட்-19 தடுப்பூசியை உற்பத்தி செய்ய பிரித்தானியா- சுவீடன் மருந்து நிறுவனத்துடன் அவுஸ்ரேலியா ஒப்பந்தம்!
20 Aug,2020
ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் கொவிட்-19 தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உற்பத்தி செய்ய, பிரித்தானியா- சுவீடன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஸெனெக்குடன் அவுஸ்ரேலியா அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதனை பிரதமர் ஸ்கொட் மோரிஸன் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அவுஸ்ரேலியா மக்கள் அனைவருக்கும் அந்தத் தடுப்பூசி இலவசமாகக் கிடைப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது என பிரதமர் கூறினார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனை நிலையில் உள்ளது. எனவே, அதன் செயற்திறனை நிரூபிப்பதற்கு இன்னும் சில பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அந்த மருந்து அனைத்து கட்ட சோதனைகளிலும் வெற்றியடைந்தால், அதனை 2.5 அவுஸ்ரேலியர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்வதற்கான உற்பத்திப் பணிகள் உடனடியாகத் தொடங்கும்’ என கூறினார்.
அவுஸ்ரேலியாவில் தற்போது கொவிட்-19 தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அங்கு பல்வேறு நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவுஸ்ரேலியாவில் இதுவரை 24,236பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 463பேர் உயிரிழந்துள்ளனர்