உலக செய்திகள்அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடன் அதிகாரபூர்வமாக அறிவிப்பு
20 Aug,2020
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2வது முறையாக போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் இறங்கியுள்ளார்.
ஜோ பைடன் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்ட போதிலும் கொரோனா தொற்று காரணமாக அவரை அதிகாரபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. காணொலி காட்சி வாயிலாக நடந்து வரும் இந்த மாநாட்டில் நேற்று ஜோ பைடன் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஜோ பைடன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஜனநாயக கட்சியின் பரிந்துரையை ஏற்று கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை” என குறிப்பிட்டுள்ளார்.
ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் இதுபற்றி கூறுகையில், “இந்த தேசத்தின் இதயம் இன்னும் கருணையுடனும் தைரியத்துடனும் துடிக்கிறது என்பதை நாம் காட்டியுள்ளோம். நமது தேசத்திற்கு தகுதியான தலைமை தேவை. உங்களுக்கு தகுதியானவர்” என கூறினார்.
ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.