வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், 'டிக்டாக்' நிறுவனத்தின் சொத்துக்களை, 90 நாட்களுக்குள் விற்க, 'கெடு' விதித்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த, பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டாக் என்ற செயலியை நடத்துகிறது. இது, மொபைல் போனில், 'வீடியோ' பதிவுகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இதனால், குறுகிய காலத்தில், கோடிக்கணக்கானோர், டிக்டாக் செயலியை பதிவிறக்கி பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், டிக்டாக் வாடிக்கையாளர் தகவல்களை, அந்தந்த நாடுகளில் பராமரிப்பதற்கு பதிலாக, சீனாவில் உள்ள, 'சர்வர்'களில் சேமிப்பதாக புகார் எழுந்தது. சீன அரசு, இந்த தகவல்களை உளவு பார்க்கவும், பிற நாடுகளில் பொய் பிரசாரம் செய்ய பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, 7ம் தேதி, 'அமெரிக்காவில் செயல்படும், டிக்டாக் நிறுவனம், பைட் டான்சுடன் எந்தவொரு தகவலையும் பகிரக் கூடாது' என, டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். தேசப் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக, டிரம்ப் தெரிவித்திருந்தார். அதுபோல, சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் தகவல்களை பகிர, அதன் துணை நிறுவனமான, 'விசாட்' செயலிக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு, செப்., 20ல் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், டிரம்ப் நேற்று, 'பைட் டான்ஸ் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள, டிக்டாக் சொத்துக்களை, 90 நாட்களுக்குள் விற்க வேண்டும்' என, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எதிராக, பைட் டான்ஸ் செயல்படக் கூடும் என, வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதன் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக, டிரம்ப் கூறியுள்ளார். இதனால், அமெரிக்காவில் உள்ள டிக்டாக் வர்த்தகத்தை விற்க வேண்டிய நெருக்கடிக்கு, பைட் டான்ஸ் ஆளாகியுள்ளது. ஏற்கனவே, மைக்ரோசாப்ட் நிறுவனம், அமெரிக்காவில் இயங்கும் டிக்டாக் நிறுவனத்தை கையகப்படுத்துவது குறித்து, பேச்சு நடத்தி வருகிறது.
தற்போது, டிரம்ப் பிறப்பித்த உத்தரவால், மேலும் பல நிறுவனங்கள், டிக்டாக் நிறுவனத்தை கையகப்படுத்தும் போட்டியில் குதிக்கும் என, தெரிகிறது.இதற்கிடையே, அமெரிக்க அரசு, உண்மையை ஆராயாமல், சட்ட விதிகளை பின்பற்றாமல், சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாக, டிக்டாக் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இரு தனியார் நிறுவனங்கள் இடையிலான பேச்சில், அரசு, மூக்கை நுழைப்பதாக கூறி, காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தியா, டிக்டாக் உள்ளிட்ட, சீனாவின், 106 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.