மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது.
இதன் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா. ஆயுத தடையை விதித்தது.
இதன் மூலம் ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.
எனினும் அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் ஈரான் மீதான ஆயுத தடை 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காலாவதியாகும் என ஐ.நா. உத்தரவாதம் அளித்தது.
இதனிடையே இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது. இந்த விவகாரத்தில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடிக்கிறது.
இந்த நிலையில் ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடை வருகிற அக்டோபரில் காலாவதியாகும் நிலையில் அந்த தடையை காலவரையின்றி நீட்டிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.
இது தொடர்பாக 15 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது.
எனினும் இந்த தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளான சீனா மற்றும் ரஷியா கடுமையாக எதிர்த்தது.
ஒருவேளை இந்த தீர்மானம் நிறைவேறினால் தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரிப்போம் என இந்த 2 நாடுகளும் தெரிவித்திருந்தன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்படும் ஒரு தீர்மானம் நிறைவேற வேண்டுமானால் 15 உறுப்பு நாடுகளில் 9 நாடுகள் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. அப்போது ஈரான் மீதான ஆயுத தடை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அமெரிக்கா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய இரு நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகள் வாக்களிக்கவில்லை. போதிய ஆதரவு இல்லாததால் அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறியதாவது:-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கான பொறுப்பு உள்ளது. ஆனால் அது அதன் அடிப்படை பணியை நிலை நிறுத்துவதில் தோல்வியுற்றது.
ஈரான் மீதான 13 ஆண்டுகால ஆயுத தடையை நீட்டிப்பதற்கான ஒரு நியாயமான தீர்மானத்தை நிராகரித்ததுடன், கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவாளரான ஈரான் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இல்லாமல் ஆயுதங்களை வாங்கவும், விற்கவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வழிவகுத்தது.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்க்கமாக செயல்படத்தவறியது மன்னிக்க முடியாதது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்து உள்ள அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான நிர்வாகம் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முன்னதாக ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த தகவலை ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தர தூதர் கெல்லி கிராப்ட் தெரிவித்தார்