ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை துண்டிக்க துருக்கி பரிசீலனை
16 Aug,2020
இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே தூதரக நல்லுறவைப் பேணுவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஐ.நா. வரவேற்றுள்ள நிலையில், அமெரிக்கா சீனா, எகிப்து ஆகிய நாடுகள் வெகுவாக பாராட்டி உள்ளன.
அதே சமயம் ஈரான், துருக்கி, பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக சாடிஉள்ளன.
இந்த நிலையில் இந்த விவகாரம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை துண்டிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “மத்திய கிழக்கில் அதிகாரம் மற்றும் அரசியலின் சமநிலையை மாற்றியமைக்கும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்றுப் பிழையை இழைத்து விட்டது. எனவே ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவுகளை நிறுத்தி வைக்க அல்லது அங்குள்ள எங்கள் தூதரை திரும்ப அழைப்பது குறித்து பரிசீலிக்க வெளியுறவுத்துறை மந்திரியிடம் தெரிவித்துள்ளேன்” என கூறினார்.