லெபனான் அரசு கூண்டோடு ராஜினாமா செய்துள்ள நிலையில், ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பெய்ரூட்டில் அவசரகால நிலை அறிவிப்பு: ராணுவத்திடம் முழு பொறுப்பும் ஒப்படைப்பு
லெபனான் நாட்டில் மக்கள் போராட்டம்
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் கடந்த 4-ம்தேதி வெடித்துச் சிதறியது. இதில், 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேலும், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. இந்த பெரும் வெடிவிபத்தில் ஏறக்குறைய 3,00,000 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். உலக வரலாற்றில் நடைபெற்ற வெடிவிபத்தில் மிகப்பெரும் வெடிவிபத்தாக இந்த துயரச் சம்பவம் பார்க்கப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் முறையான பாதுகாப்பின்றி வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே கொரோனா பிரச்சினையை சந்தித்து வரும் லெபனான் இந்த விபத்து காரணமாக பொருளாதாரம், நிதிச்சுமையில் சிக்கியுள்ளது.
விபத்திற்கு எதிர்ப்பு, ஊழல், அரசின் நிர்வாகத்தோல்வி, நிலைத்தன்மையற்ற அரசியல் போன்றவற்றை வலியுறுத்தி தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் லெபனான் அரசு மொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு செய்தனர்.
அதற்கு முன் அவசரகால என அறிவித்து, நாட்டை ராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை என்பதால் இன்று நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.
அப்போது அவரகால நிலை அறிவித்ததுடன், ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின் அனைவரும் ராஜினாமா செய்தனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க, பொதுமக்கள் கூடுவதை தடுக்க, மீடியாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் ராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. மேலும், பாதுகாப்பு மீறல்களுக்காக பொதுமக்களை ராணுவ தீர்ப்பாயங்களுக்கு பரிந்துரைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.