கிழக்கு மத்தியதரைக் கடலில் இராணுவ இருப்பை அதிகரிக்க பிரான்ஸ் திட்டம்!
14 Aug,2020
சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு தொடர்பாக கிரேக்கம் மற்றும் துருக்கி இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், கிழக்கு மத்தியதரைக் கடலில் பிரான்ஸ் தனது இராணுவ இருப்பை அதிகரிக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்று (புதன்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பிய பங்காளிகளின் ஒத்துழைப்புடன், எதிர்வரும் நாட்களில் கிழக்கு மத்தியதரைக் கடலில் பிரான்ஸ் இராணுவ இருப்பை தற்காலிகமாக வலுப்படுத்த முடிவு செய்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துருக்கியின் ஒருதலைப்பட்ச எதிர்பார்ப்பை நிறுத்தி, அண்டை நேட்டோ உறுப்பினர்களிடையே அமைதியான உரையாடலை அனுமதிக்க மக்ரோன் வலியுறுத்தினார்.
இந்த வாரம் கிரேக்க தீவான கஸ்டெல்லோரிசோவிற்கு துருக்கிய கடற்படைக் கப்பலான ‘ஓருக் ரெய்ஸ்’ என்ற ஆய்வுக் கப்பலை துருக்கி அனுப்பியபோது இருநாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
கப்பலை கண்காணிக்க கிரேக்கமும் போர்க்கப்பல்களை அனுப்பியது. இது தற்போது சைப்ரஸுக்கு மேற்கே பயணம் செய்கிறது.