கொவிட்-19 அதிகரிப்பு: கிரேக்க அரசாங்கத்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
11 Aug,2020
கிரேக்கம் முழுவதும் நோய்த்தொற்றுகள் சீரான வேகத்தில் அதிகரித்து வருவதால், நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக கிரேக்க அரசாங்கத்தால் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் வடக்கு நகரத்தில் நடைபெறும் தெசலோனிகி சர்வதேச கண்காட்சி இரத்து செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் புதிய எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளும் அறிவிக்கப்பட்டன.
மேலும், பிரபலமான கிரேக்க தீவுகளில் அமைந்துள்ள பொழுதுபோக்கு இடங்கள் நள்ளிரவில் மூடப்பட வேண்டும்.
ஸ்பெயின், பெல்ஜியம், சுவீடன், நெதர்லாந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு ஒகஸ்ட் 17ஆம் திகதி வரை பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு வைரஸுக்கு எதிர்மறையான சோதனை செய்ததற்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டும்.
ஒகஸ்ட் 16ஆம் திகதி வரை, அல்பேனியாவுடனான ககாவியா நில எல்லை வழியாக ஒரு நாளைக்கு அதிகபட்சம் 750 பேர் கிரேக்கத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
கச்சேரிகள் மற்றும் நிகழ்ச்சிகள் உட்பட பார்வையாளர்கள் நிற்க வேண்டிய கிரேக்கத்தில் எந்தவொரு பொது நிகழ்வும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
மதுபானசாலைகள் மற்றும் இரவு விடுதிகள் உட்பட அனைத்து வணிக நிறுவனங்களும் கிரீட், கிழக்கு மாசிடோனியா மற்றும் திரேஸ்; தெசலோனிகி, சால்கிடிகி தீபகற்பம், லாரிசா மற்றும் கோர்பு (பாக்ஸி தீவுகள் உட்பட); ஆன்டிபரோஸ், கோஸ், மைக்கோனோஸ், பரோஸ், ரோட்ஸ், சாண்டோரினி மற்றும் ஜாகிந்தோஸ் தீவுகள் மற்றும் கேடரினி மற்றும் வோலோஸ் நகரங்கள் ஆகிய இடங்களில் மூடப்பட வேண்டும்.