ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை மேலும் நீடிக்க 6 வளைகுடா நாடுகள் கோரிக்கை!
11 Aug,2020
ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை மேலும் நீடிக்க வேண்டும் என 6 வளைகுடா நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் முடிவுக்கு வர உள்ளது.
எனவே ஈரான் மீதான இந்த தடையை மேலும் நீடிக்க வேண்டும் என ஐ.நா., பாதுகாப்பு சபையிடம் வலியுறுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஓமன், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய 6 வளைகுடா நாடுகள் ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக வளைகுடா ஒத்துழைப்பு சபை, ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.
இதில் ஈரான் போர் விமானங்கள், இராணுவ தாங்கிகள் மற்றும் போர்க் கப்பல்கள் போன்ற வெளிநாட்டு தயாரிப்பு ஆயுதங்களை வாங்குவதை தடுக்கும் ஆயுத தடையை நீடிப்பதற்கு மேற்கூறிய 6 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஈரான் அண்டை நாடுகளில் ஆயுத தலையீடுகளை நிறுத்தவில்லை. நேரடியாகவும் ஈரானால் பயிற்சியளிக்கப்பட்ட ஆயுத இயக்கங்கள் மூலமாகவும் அந்த நாடு ஆயுத பரிமாற்றங்களில் ஈடுபட்டு வருகின்றது.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட்டு வரும் சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்கி வருகின்றது’ என குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே வளைகுடா நாடுகளில் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு சபையின் இந்த கடிதம் அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்யும் பொறுப்பற்ற செயல் என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மவுசாவி கூறியுள்ளார்.