லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் கப்பல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து துறைமுகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் 2014-ம் ஆண்டு முதல் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது. இங்கு நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தின் சுற்றளவு முழுவதும் கடும் சேதம் அடைந்துள்ளது. 200 கி.மீ தொலைவில் உள்ள தீவிலும் விபத்தின் தாக்கம் உணரப்பட்டது.
இந்த வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக உயிர் இழந்து உள்ளனர். 4000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெய்ரூட் நகரில் 2 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கிலோ மீட்டர் அளவில் பரவிய சேதங்களை கணக்கிடும் பணி மற்றும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.
வெல்டிங் செய்யும் ஒருவரால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அப்பகுதியில் ஒருவர் வெல்டிங் செய்து கொண்டிருந்ததில் ஏற்பட்ட தீப்பொறியே ரசாயனப் பொருட்கள் தீப்பிடிக்கக் காரணம் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக லெபனான் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால்தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச பாதுகாப்பு மற்றும் ராஜீய ரீதியில் லெபனான் அரசுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாபுத்துறை அமைச்சர் பென்னி கண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெடிகுண்டு நிபுணர் ஒருவர், அது முழுவதும் அம்மோனியம் நைட்ரேட்டாக இருக்க வாய்ப்பில்லை, வேறு ஏதாவது வெடிப்பொருட்களாகக் கூட இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார். அந்த வெடிவிபத்து, 3 கிலோ டன் டிஎன்டி என்னும் வெடிப்பொருள் வெடித்தால் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதாவது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட லிட்டில் பாய் என்னும் வெடிகுண்டின் அளவில் ஐந்தில் ஒரு பங்குடைய குண்டு வீசப்பட்டால் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமோ அந்த அளவுக்கு பயங்கரமாக வெடித்துள்ளது எனகூறி உள்ளார்.
இந்த நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ராணுவ உயர் அதிகாரிகளுடன் பெய்ரூட் சம்பவம் குறித்து விவாதித்ததாகவும், இது வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.