உகான் நகரில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்
06 Aug,2020
சீனாவின் மத்திய நகரமான உகானில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று வெளிப்பட்டது. அங்கு கொரோனாவில் இருந்து மீண்டுள்ள 100 பேரை உகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் ஆஸ்பத்திரி கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்து வந்தது. இவர்களின் சராசரி வயது 59. ஜூலையுடன் முடிந்த முதல் கட்ட முடிவில், இந்த 100 பேரில் 90 பேர் நுரையீரல் சேதம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது இவர்களின் நுரையீரல் காற்றோட்டம், வாயு பரிமாற்ற செயல்பாடுகள், ஆரோக்கியமான மற்றவர்களின் நிலைக்கு மீள வில்லை. டாக்டர் பெங் ஜியோங் தலைமையிலான குழுவினர்தான் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர்.
கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகும் ஆக்சிஜன் எந்திரங்களை நம்ப வேண்டியதிருக்கிறது என பீஜிங் பல்கலைக்கழகத்தின் டோங்ஸிமென் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர் லியாங் டெங்ஸியாவ் கூறி உள்ளார். மேலும் கொரோனா பாதித்து மீண்ட 65 வயதுக்குட்பட்டோரில் 10 சதவீதம்பேரின் உடலில் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடி) மறைந்து விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.