லெபனானுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்
05 Aug,2020
லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான நாடு. இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிரியாவுடனும், தெற்கே இஸ்ரேலையும், மேற்கே மத்திய தரைக்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே போர்களும் நடைபெற்றுள்ளது. இதனால் இருநாடுகளும் ஒருவரை ஒருவர் எதிரி நாடுகளாகவே கருதுகின்றன.
மேலும், லெபனானில் பல ஆண்டுகளாக ஹிஸ்புல்ல்லா பயங்கரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் அரசுக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த காரணங்களால் லெபனான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வருகிறது.
இதற்கிடையில், லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 70 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
துறைமுகப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய வெடிபொருட்களால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வெடிவிபத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு அதன் எதிரிநாடாக கருதப்படும் இஸ்ரேல் உதவ முன்வந்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் அரசு தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில், லெபனானில் ஏற்பட்டுள்ள வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்க முன்வந்துள்ளோம்.
உடனடியாக அவசரகால உதவிகளை சர்வதேச இடைத்தரகு வழியாக வழங்கவும் இஸ்ரேல் தயாராக உள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பெய்ரூட் தாக்குதலுக்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் அரசும், ஹிஸ்புல்லா அமைப்பும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.